Saturday, May 23, 2009

பிரபாகரனைத் தலைவனாக பெற்ற ஈழத்தமிழர்கள் பாக்கியசாலிகள்!

ஈழத்தமிழர்கள் பாக்கியசாலிகள். தம் இன மக்களின் விடுதலைக்காக தன்னையும், தன் பிள்ளையையும் அர்ப்பணிக்கும் மாவீரனைத் தலைவனாகப் பெற்ற ஈழத்தமிழர்கள் பாக்கியசாலிகள்தானே? இந்தியா, சீனா போன்ற வல்லரசுகள் ஈழத் தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசுக்கு துணைக்கு நின்றபோதிலும், உறுதியும் துணிச்சலுமாக தமது மண்ணின் விடுதலைக்காகப் போராடவும், மடியவும் தயராக இருக்கிற தலைவனைப் பெற்ற மக்களை நினைத்தும், அவர்களின் தலைவனை நினைத்தும் பெருமிதமாக இருக்கிறது.

ஆறரை கோடி எண்ணிக்கையில் இந்தியாவில் வாழும் தமிழர்களைப் போல ஈழத்தமிழர்கள் துரதிர்ஷ்டசாலிகள் இல்லையே! தன்னையும் தன் குடும்பத்து உறுப்பினர்களின் நலனையும் தவிர வேறொன்றும் தெரியாத தலைவர்களைப் பெற்ற இந்தியத் தமிழர்களைப் போல துர்பாக்கியம், ஈழத் தமிழர்களுக்கு இல்லையே. தேர்தல் நேரத்தில் தங்களை சீட்டுகளுக்கு விற்றுக்கொண்டார்கள் தலைவர்கள். நோட்டுகளுக்கு விற்றுக் கொண்டார்கள் தமிழர்கள். வரலாற்றின் கறை படிந்த காலகட்டத்தில் தலைகுனிந்து தமிழகத் தமிழர்கள் இருக்கும்போதும், தன் வீரத்தால் ஈழத்தமிழர்களைத் தலை நிமிர வைத்திருக்கிறார் பிரபாகரன். அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லை களத்தில் இறந்துபோனாரா? என்ற கேள்விகளுக்கு இருத் தரப்பிடமும் உறுதியான பதில்கள் தற்போது இல்லை. ஆனால், ஈழத்தில் உரிமை மறுக்கப்பட்டு வாழ்வு சூறையாடப்பட்டு ஒவ்வொரு நொடியும் அணு அணுவாக செத்துப்பிழைக்கிற அப்பாவித் தமிழர்களின் நிலை அப்படியேதான் இருக்கிறது. இந்த நேரத்தில் பிரபாகரனைப் பற்றிய மர்மங்களைவிட, இந்தியத் தமிழர்களின் நிலைகுறித்து மிகுந்த அச்சம் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்.


சமஉரிமை மறுக்கப்பட்ட தம் இன சகோதரர்களின் விடுதலைக்கும், பாலியல் வல்லுறவுக்கு ஆளான சகோதரிகளின் விடுதலைக்கும், பாலுக்கு அழுகிற பிள்ளைகளை விட பயத்தில் அழுகிற தலைமுறையின் உரிமைக்கும் போராட தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் தந்திருக்கிறார் பிரபாகரன். சில மணி நேர உண்ணாவிரத நாடகம் நிகழ்த்துபவர்களையும், வாய்ச்சொல் வீரர்களாக ஒரு சீட்டுக்கு அணிமாறிய அசகாய சூரர்களையும், ‘முதலில் அசிங்கமானது அவர்கள்தான். அப்புறம்தான் நாங்கள் சீட்டுக்கு விலைபோனோம்’ என்று கூச்சமில்லாமல் பேசிய சிறுத்தைகளையும் தலைவர்களாகப் பெற்ற எம்மைப் போன்ற பாவப்பட்ட மக்கள் இல்லையே ஈழத்தமிழர்கள். உரிமைகளைப் பெற இந்தியத் தமிழர்களையும், தலைவர்களையும், இந்தியாவையும் நம்பி மோசம் போனது மட்டுமே அவர்கள் செய்தமாபெரும் பிழை. பிரபாகரனைப் போன்றே தமிழகத் தலைவர்களும் இருப்பார்கள் என்று நம்பியதுதான் அவர்கள் செய்த தவறு.

எங்களுடைய தலைவர்களுக்கு கவிதை எழுதத் தெரியும்; அறிக்கை விடத்தெரியும்; மரங்களுக்கும் உணர்ச்சிவருகிற அளவில் மேடைகளில் முழக்கமிடத்தெரியும். ஆனால் அவர்கள் மரத்துபோன இதயத்துக்குச் சொந்தக்காரர்கள். மானம் என்றால் என்னவென்றோ, மனிதநேயம் என்றால் என்னவென்றோ தெரியாதவர்கள். பிரபாகரனின் முடிவுகளிலும், செயல்பாடுகளிலும் கருத்துவேறுபாடுகள் இருக்க எல்லா நியாயங்களும் இருக்கின்றன. ராஜீவ் படுகொலை, இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு, மற்ற போராளி குழுக்களைக் கொலை செய்வது... என நிறைய இடங்களில் பிரபாகரனோடு முரண்படவும், விமர்சிக்கவும், எதிர்க்கவும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ‘தமிழர்களை அடகு வைத்து பிழைப்பு நடத்துகிறவர்’ என்று யாரும் விரல் நீட்டிக் குற்றம் சொல்லமுடியாத மானமுள்ள வாழ்வு வாழ்ந்திருக்கிறார் பிரபாகரன். வார்த்தைக்கும் வாழ்வுக்கும் வித்தியாசமில்லாத மாவீரனின் மரணம் பற்றிய மர்மங்களால் தவிக்கும் உலகத் தமிழர்களுக்கு எந்த வார்த்தைகளால் ஆறுதல் அளிப்பது?


‘வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் இதுதான்’ என்று இலங்கைராணுவமும், ராஜபக்ஷேவும் வெற்றிச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். ‘பிரபாகரன் இறந்த செய்தி பொய்யாகிவிடக்கூடாதா?’ என்று மருகிய உலகத்தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைய, இலங்கை ராணுவமும், ராஜபக்ஷே கூட்டமும் வெறி கொண்டு அலைகிறது. இந்த வெற்றியில் இலங்கையைவிட இந்தியாவுக்கு அதிக பெருமிதம் இருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


வெளிநாட்டிலிருந்து திரும்பிய ராஜபக்ஷே இலங்கை மண்ணை முத்தமிட்டபோதே, அவருடைய உதடுகளில் ஈழத்தமிழர்களின் இரத்தம் ஒட்டியிருந்ததை கவனிக்கும் மனதிடத்தில் தமிழர்கள் இல்லை. பிரபாகரனின் மரண செய்தி கேட்டு சிங்கள மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியிருக்கிறார்கள். தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை மேலும் பொய்யாக்குகிறது சிங்கள மக்களின் வெற்றிக் களிப்பு. தனி ஈழம் மட்டுமே நிரந்தர தீர்வு என்பதற்கான அத்தனை கொடூரங்களும் அப்பாவித் தமிழர்கள் மீது அங்கு நிகழ்த்தப்படுகிறது. போரின் பெயரால் பல ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை ராணுவத்தளபதிகளுக்கு பதவி உயர்வு அளித்திருக்கிறார் ராஜபக்ஷே. இறந் ததமிழர்களுக்கு வாய்க்கரிசியையும், இருக்கும் தமிழர்களுக்கு வாக்குறுதிகளையும் வழங்கியிருக்கிறார். இந்தியத் தலைவர்கள் அதை வரவேற்கலாம். வார்த்தை செயலாகும்வரை பாதிக்கப்பட்ட மக்களால் அதை நம்ப முடியாது.

முன்னால் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை புலிகள்கொன்றார்கள் என்ற வரலாற்றுத் தவறுக்கு இந்தியா பழிதீர்த்துக் கொண்டது என்றே சொல்லலாம். அதற்காக, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும்போது மௌனமாக இருந்ததும், ராணுவ உதவிகளை வழங்கியதும் தமிழகத் தமிழர்கள் மனதில் நூற்றாண்டு கடந்த கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 'தன் கணவர் இறந்த மே21-ம் தேதிக்குள் இலங்கையில் எல்லாம் முடிந்துவிட வேண்டும் என்று விரும்பினார் சோனியா' என்கிற மாதிரியான செய்திகள் வெளியானபோது, அதை அந்த சமயத்தில் நம்பவோ, நம்பாமல் இருக்கவோ முடியவில்லை. ஆனால் இப்போது உண்மை புரிகிறது!


தன் கூட்டணி விசுவாசத்திற்கு மீண்டும் பலமான சில கேபினட் மந்திரி பதவிகளை தன் வாரிசுகளுக்காக வாங்குவார் தி.மு.க.தலைவர் கருணாநிதி.அந்த வாய்ப்பு நமக்கு இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தப்படுவார் மருத்துவர் ராமதாஸ். தொல்.திருமாவளவனுக்கும் சொல்வதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். சினிமாவில் புரட்சிக் கலைஞராக இருந்த விஜயகாந்த் தன் பலத்தை நிரூபிக்க தனித்து நின்று 30 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றதில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பேரம் நன்றாக நடத்துவார்.


தமிழகத்தின் மிகப்பெரிய போராட்டமாக வெடித்து, திராவிடக்கட்சிகள் ஆட்சி வரக் காரணமான இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஆறு பேர்தான் உயிரிழந்தனர். ஈழத் தமிழர்களுக்காக வரிசையாக இளைஞர்கள் தீக்குளித்த காட்சிக்குப் பிறகும், ஈழத் தமிழர்கள் உயிரிழப்பு மக்கள் பிரச்னையாகவில்லை என்று வாய் கூசாமல் சொன்னவர்களைப் பார்த்து வாயடைத்து நின்றோம் நாம். ரௌடித்தனங்களிலும், மக்களின் வறுமையைப் பயன்படுத்திய குரூர புத்தியாலும் ஆட்சியைப் பிடித்தவர்கள், ‘மக்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர்’ என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறார்கள்.


தமிழ்நாட்டு தலைவர்களுக்கு கொஞ்சமேனும் மானம் இருந்தால், பிரபாகரன் இறந்துவிட்ட இந்தச் சூழலிலாவது, ஈழத் தமிழர்களின் பிரச்னை தீரும்வரை நாங்கள் நாடாளுமன்ற அரசியலியல் பங்கேற்க மாட்டோம் என்று சொல்ல வேண்டும். ஒரு பக்கம் பணத்தைக் காட்டியும், இன்னொரு பக்கம் ஈழத் தமிழர்களின் பிணத்தைக் காட்டியும் ஓட்டு கேட்ட தமிழக தலைவர்கள் தங்கள் மீது படிந்துள்ள வரலாற்றுக் கறையை நீக்க இருக்கும் ஒரே கடைசி வழி நாடாளுமன்ற புறக்கணிப்புதான்.

பிணக் குவியலுக்கு நடுவிலும் சிரித்துக் கொண்டே வாக்கு கேட்டவர்கள், இத்தகைய முடிவு எடுப்பார்கள் என்பது அதிகபட்ச எதிர்பார்ப்பாக தெரியலாம். நம்முடைய எதிர்ப்பார்ப்பு என்பதைவிட அதுவே நியாயமானது. தலைமுறைகளைத் தவிக்கவிட்டு பதவியில் அமர்வது என்பது மனிதநேயத்துக்கு நேர்விரோதமானது.


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பங்கு போடத் துடித்தவர்கள், இனி கட்சித் தலைவர்களாக வேண்டுமானால் வலம் வரலாம். ஆனால் தமிழினத் தலைவர்களாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளும் தகுதி தற்போது எவருக்குமில்லை என்ற வலிமிகுந்த உண்மையை ஒப்புக்கொள்வது நம்முடைய கடமை. வீரமுள்ள தலைவனாகவும், மானமுள்ள தலைவனாகவும் தன் மக்களுக்காக களத்தில் நின்ற அல்லது நிற்கிற, பிரபாகரனை ஜெயித்துவிட்டதாக இலங்கை ராணுவம் மகிழலாம். போர் என்கிற அடிப்படையில் இராணுவம் ஜெயித்திருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், ஈழத்தமிழர்கள் சந்தித்த பிரச்னைதான் பிரபாகரனை உருவாக்கியதே தவிர, பிரபாகரன் இலங்கைக்குப் பிரச்னையே இல்லை. இரண்டு வல்லரசுகளின் ஆயுதங்களால் மக்களையும் அவர்களின் தலைவனையும் கொலை செய்த இலங்கை அரசு, கிளையை மட்டுமே வீழ்த்தியிருக்கிறது. இன்னும் பிரச்னையின் வேர் அப்படியேதான் இருக்கிறது.


இலங்கைஅரசின் மகிழ்ச்சிக் கூச்சலில் ஈழத் தமிழர்களின் விசும்பல் யாருக்கும் கேட்காமல் போகக்கூடும். ராணுவம் வைத்திருக்கும் ஆயுதங்களைவிட அப்பாவிமக்களின் கண்ணீருக்கு வலிமை அதிகம் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.தங்கள் உரிமைக்காக களத்தில் மகனையும், மகனையொத்த பலரையு ம்பலிகொடுத்தார் பிரபாகரன். ஈழத்தமிழர்களுக்கு பிரச்னை வந்தால் கௌரவமாக சொல்லிக்கொள்ள தலைவர் இருக்கிறார். தமிழகத் தமிழர்கள் ஏதாவது நிகழுமாயின் ஏனென்று கேட்க யாரும் இல்லை. பதவி சுகங்களுக்கு மொத்தமாக மக்களை அடகு வைக்கவும் தயங்க மாட்டார்கள் எம் தலைவர்கள் என்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தல் நிரூபத்தில் எம்மை உறைய வைத்திருக்கிறது. பிரபாகரனின் நிலைமை தமிழகத் தமிழர்களுக்கும் இது மீளமுடியாத துயரம்தான். ஆனால் அதையும்தாண்டி ,பிணங்களின் மீதும் அரசியல் நடத்த துணிந்துவிட்ட பச்சோந்தித்தனமான தலைவர்களைப் பெற்றிருக்கிறோமே என்கிற துக்கமே எமக்கு தொண்டையை அடைத்து, கண்ணில் நீரை வரவழைக்கிறது.


-த. செ. ஞானவேல்

No comments: